ஓசூரில் பரபரப்பு: முட்டை வியாபாரி ரூ.6,902 கோடிக்கு வர்த்தகம் செய்ததாக வந்த நோட்டீஸ்மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பால் வெளிச்சத்திற்கு வந்தது
ஓசூரை சேர்ந்த முட்டை வியாபாரி ரூ.6 ஆயிரத்து 902 கோடிக்கு வர்த்தகம் செய்ததாக நோட்டீஸ் வந்த நிலையில், அவரது மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிப்பால் வெளிச்சத்திற்கு வந்தது.;
ஓசூர்
ஓசூரை சேர்ந்த முட்டை வியாபாரி ரூ.6 ஆயிரத்து 902 கோடிக்கு வர்த்தகம் செய்ததாக நோட்டீஸ் வந்த நிலையில், அவரது மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிப்பால் வெளிச்சத்திற்கு வந்தது.
முட்டை வியாபாரி
தர்மபுரி மாவட்டம் பண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா நடராஜன் (வயது 50). இவர் ஓசூரில் உழவர் சந்தை சாலையில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். மேலும், ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு அவரது மனைவி பெயரில் ராஜா நடராஜன் விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை அவர் ஆன்லைனில் பார்த்தார். அப்போது குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து சரக்கு, சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளராக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜா நடராஜன் தனக்கு வந்த நோட்டீசை ஓசூர் வணிக வரித்துறை அதிகாரிகளிடம் காண்பித்து விசாரித்தார். அதில் ராஜா நடராஜன் பெயரில் ஒரு நிறுவனத்தை யாரோ தொடங்கி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ராஜா நடராஜன் கூறியதாவது:-
ரூ.6,902 கோடி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் சென்னை எழும்பூர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் என்றும், இந்த ஆண்டில் 6,902 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்ததாகவும், அதற்கு ஜி.எஸ்.டி. ரூ.1,932 கோடி என குறிப்பிட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரித்த போது அதில் குறிப்பிட்ட முகவரியில் நிறுவனம் எதுவும் இல்லை. வீடுகளே இருந்தன.
மேலும் அந்த வீட்டின் உரிமையாளரும் அப்படி எந்த நிறுவனமும் இல்லை என்று கூறினார். இதனால் அந்த நோட்டீஸ் தவறாக வந்திருக்கலாம் என நினைத்தேன். இந்த நிலையில் எனது மனைவிக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் நான் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.
மன உளைச்சல்
இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நிறுவனம் தற்போது டெல்லியில் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தின் காரணமாக, எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே நான் மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.