புரிந்துணர்வோடு பெறும் கல்விதான் லட்சியத்திற்கு உறுதுணையாக அமைந்திடும்

புரிந்துணர்வோடு பெறும் கல்விதான் லட்சியத்திற்கு உறுதுணையாக அமைந்திடும் என்று மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை கூறினார்.

Update: 2023-01-06 18:45 GMT

விழுப்புரம்:

காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள புதிய அறிவியல் ஆய்வக கட்டிடம், சித்தேரியில் புதிய ரேஷன் கடை கட்டிடம், வெள்ளேரிப்பட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், துரை.ரவிக்குமார் எம்.பி., விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம் பள்ளி, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும்.

மாணவர்களுக்கு அறிவுரை

கஞ்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்போது 10-ம் வகுப்பு வரை உள்ளது. விரைவில் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் படிக்கும்போதே மாணவர்கள், தங்கள் குறிக்கோளை தீர்மானித்து முழு முயற்சியுடன் கல்வி பயில வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் வெறும் கல்வி புத்தகங்களை படிப்பது மட்டுமல்லாமல் நாட்டு நடப்புகள் குறித்த பொது அறிவையும் நாள்தோறும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வி பயில புரிந்துணர்வு அவசியம். புரிந்துணர்வோடு பெறும் கல்விதான் தங்களின் லட்சியத்திற்கு உறுதுணையாக அமைந்திடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கல்பட்டு ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வீரராகவன், காணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், எழிலரசு, ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், கலாவதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமலிங்கம், சிவஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்