கல்வி கற்றால் உயர்ந்த நிலையை அடைய முடியும்; கூடுதல் கலெக்டர் பேச்சு
கல்வி கற்றால் உயர்ந்த நிலையை அடையலாம் என்று கூடுதல் கலெக்டர் ரிஷப் கூறினார்.;
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி வரவேற்றார். அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட மாநில சட்ட ஆலோசகரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான கணபதி திட்ட விளக்க உரையாற்றினார்.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் தலைமை தாங்கி பேசியதாவது:-
அம்பேத்கர் வகுத்த சட்டம் இன்றைக்கு அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வி பயில்வதன் மூலம் பெற்றோர்களுக்கு மதிப்பு கிடைக்கிறது, பெருமையை சேர்க்கிறது. கல்வியால் மட்டுமே மாற்றம் ஏற்படுத்த முடியும். அம்பேத்கர் வகுத்த சட்டத்தினால் தான் அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அனைவரும் கல்வி பயில வேண்டும். படிப்புக்கு எல்லையே கிடையாது. இளம் வயதில் சரியான முறையில் கல்வி கற்றால் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கட்டுரை, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள், விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.