தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்று தந்தவர் எடப்பாடி பழனிசாமி

Update: 2023-06-20 19:15 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:-

தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்று தந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிறந்தநாள் விழா பெத்தநாயக்கன்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் முன்னிலை வகித்தார். பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முருகேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் சித்ரா, மணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கூட்டம் போட்டு பேசுகின்றனர். மின் கட்டணம் உயர்த்தியபோது அதே கூட்டணி கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது மின்கட்டணம் உயர்த்துவதற்கு முன்னரே போராட்டம் நடத்தியவர் மு.க.ஸ்டாலின்.

செந்தில்பாலாஜியை மகாத்மா காந்தி, புத்தர், ஏசு போல் காட்டுவதற்கு தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு எடப்பாடி பழனிசாமியின் வீ்ட்டு வாசலிலேயே தவமாய் தவமிருந்தார். செந்தில்பாலாஜியின் சித்து விளையாட்டை தெரிந்த எடப்பாடி பழனிசாமி அன்றே அவருக்கு அ.தி.மு.க. கதவை பூட்டிவிட்டார்.

விஸ்வரூபம் எடுத்துள்ளார்

ஆனால் தி.மு.க. அவரை அமைச்சராக்கி உள்ளது. இப்போது தி.மு.க.வை அழிப்பதற்கு ஒருவர் விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்றால் அது செந்தில்பாலாஜி தான் என்பதை அக்கட்சியினரே சொல்கின்றனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி, துர்கா ஸ்டாலின் சிறைக்கு செல்வதற்கு செந்தில்பாலாஜி தான் காரணமாக இருப்பார்.

அடிமை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தான் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டார். தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை பெற்று தந்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழக வளர்ச்சிக்காக கட்டமைப்பு நிதியை பெற்றதில் முதலிடத்தில் இருந்தவர் எடப்பாடிபழனிசாமி.

தொகுதிக்கு ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்த்தால் எளிதாக 2 கோடி இலக்கை அ.தி.மு.க. அடைந்து விட முடியும். மக்கள்அ.தி.மு.க.வில் சேருவதற்குதயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் நகர செயலாளர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் தங்கமணி, மாவட்ட அவைத்தலைவர் அர்ஜுனன், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், நகர செயலாளர் மோகன். ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார், வி.பி.சேகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராஜராஜ சோழன்உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் முன்னாள் பேரூராட்சி தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்