தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்திநாடகம் ஆடுகிறது
`நீட்' தேர்வு விவகாரத்தில் தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்தி நாடகம் ஆடுகிறது என சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கட்சியில் இணையும் நிகழ்ச்சி
சேலம் மாநகர் பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சி சால்வை அணிவித்து வரவேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிறுபான்மை மக்களுக்கு எதிராக அ.தி.மு.க. இருப்பது போன்ற மாய தோற்றத்தை கடந்த காலங்களில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உருவாக்கினர். ஆனால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது. சுமார் 30 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அப்போது சிறுபான்மையின மக்களுக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படாமல் ஆட்சி நடத்தினோம்.
எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுடைய மதம் அவர்களுக்கு புனிதமானது. அதில் யாரும் தலையிடமுடியாது. யாரும், யாருக்கும் அடிமை கிடையாது. ஏனென்றால் இது ஜனநாயக நாடு. சிறுபான்மை மக்களின் உரிமைக்காக அ.தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும். எந்த ஒரு சாதி, மதத்தினருக்கும் நமது இயக்கம் விரோதி கிடையாது.
மு.க.ஸ்டாலினுக்கு பயம்
கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அவ்வப்போது அமைக்கப்படுகிறது. ஆனால் கொள்கை என்பது நிலையானது. அ.தி.மு.க.வுக்கு நிலையான கொள்கை உண்டு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
முஸ்லிம்களின் உணர்வுகளை நான் சட்டசபையில் பேசியபோது, இப்போது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு பாசம் வந்துவிட்டது என்று சொன்னார். நான் எப்போதுமே சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன்.
அ.தி.மு.க. ஒரிஜினல் டீம்
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் மு.க.ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. உண்மையிலேயே அந்த மக்களுக்கு நன்மைகள் செய்திருந்தால் அவர்கள் உங்களை நேசித்து இருப்பார்கள். ஆனால் நீங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். இன்னமும் அ.தி.மு.க. பா.ஜ.க.வின் `பி' டீமாக இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள். நாங்கள் `பி' டீமும் இல்லை. `ஏ' டீமும் இல்லை. அ.தி.மு.க. எப்போதும் ஒரிஜினல் டீம்.
நீட் தேர்வு நாடகம்
தேர்தலில் வெற்றி பெற்றால் `நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியது. தற்போது அந்த கட்சி. ஆட்சிக்கு வந்து 2½ ஆண்டுகள் ஆகியும் ஏன் `நீட்' தேர்வை ரத்து செய்யவில்லை? `நீட்' தேர்வுக்கு எதிராக அனைவரிடத்திலும் கையெழுத்து வாங்கினால் அது ரத்தாகி விடுமா? இது நாடகம் ஆடி மக்களை ஏமாற்றும் செயல். `நீட்' தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. இது முதல்-அமைச்சருக்கு தெரியாதா?
நாடாளுமன்ற தேர்தலில் மக்களை சந்திக்கும் போது `நீட்' தேர்வு ரத்து குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். கடந்த 2½ ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக ஆக்கியது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை.
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ படிப்புக்காக அ.தி.மு.க. ஆட்சியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் இந்தாண்டு சேலம் மாவட்டத்தில் 88 பேரும், தமிழகம் முழுவதும் 2,160 பேரும் மருத்துவம் படிக்கின்ற வாய்ப்பை உருவாக்கி தந்தது அ.தி.மு.க.வின் சாதனையாகும். தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி தான் நடக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், தெற்கு தொகுதி பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் பாண்டியன், சண்முகம், சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், பாலு, மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் செங்கோட்டையன், 44-வது வார்டு முன்னாள் செயலாளர் மேகலா பழனிசாமி, கொண்டலாம்பட்டி மண்டலக்குழு முன்னாள் தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.