தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது எடப்பாடி பழனிசாமி பேச்சு

தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.;

Update: 2022-06-17 13:12 GMT

திருவண்ணாமலை, 

தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பிரம்மாண்ட வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் போளூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கஅ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்.

தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக வந்த அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியான காட்டாம்பூண்டி கிராமத்தில் அ.தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செண்டை மேளங்கள் முழங்க மலர் தூவி பூர்ண கும்ப மரியாதையுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவர் அங்கு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. அவர்கள் அளித்த எந்த வாக்குறுதிகளில் இதுவரை ஒன்றை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் மருத்துவ படிப்பு படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தரப்பட்டது. ஆனால் கல்வி கடனை ரத்து செய்வதாக தேர்தலின் போது தி.மு.க. அறிவித்தது. ஆனால் இதுவரை கல்விக் கடனை ரத்து செய்யவில்லை.

இரட்டை வேடும் போடும் கட்சி

பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தனர். அதற்கு கடந்த 1 வருடமாக ஆய்வு செய்து வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் மீண்டும் வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் முதல் அரசு அலுவலர்கள் வரை அனைவரையும் தி.மு.க.வினர்ஏமாற்றி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்கிறேன் என்று கூறிய தி.மு.க. அரசு பெட்ரோலுக்கு மட்டும் பெயரளவுக்கு ரூ.3 மட்டும் குறைத்து விட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.

தேர்தலின் போது ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என்று இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி தி.மு.க. தான்.

திருவண்ணாமலைக்கு வரக்கூடிய வழி எல்லாம் கட்சி நிர்வாகிகள் மூலம் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது விவசாயிகள் எனது வாகனத்தை நிறுத்தி தடையில்லா மின்சாரத்தை வழங்க அரசுக்கு கோரிக்கை வையுங்கள் என்று கூறுகின்றனர். தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு தான் கொடுத்தது.

முதியவர்களுக்கு உதவித் தொகை ரூ.1000-த்தில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தலின் போது தி.மு.க. தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது முதியோர் உதவித் தொகை வழங்குவதை குறைத்து வருகிறது. இதனை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் முதியோர்களுக்கு உதவி தொகை வழங்க போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் இ.என். நாராயணன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் என்.பர்குணகுமார், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஏ.ராமச்சந்திரன், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் கே.வி.ரகோத்தமன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பாசறை செயலாளர் பர்வதம், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், சரவணன், ஜெயபிரகாஷ், தொப்பளான், நகர செயலாளர் செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி டிஸ்கோ குணசேகரன் மற்றும் மாவட்ட அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி தலைவர் பி.சுனில்குமார் ஆகியோர் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவருக்கு வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட பிரதிநிதி எஸ்.சில்பி சகானா சஞ்சீவிராமன் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

கலசபாக்கம் பஸ் நிறுத்தம் எதிரில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.பன்னீர்செல்வம் தலைமையிலும், மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமொழி, புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், மூர்த்தி, போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், புதுப்பாளையம் பேரூராட்சி செயலாளர் ராதா, ஜமுனாமரத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் எலத்தூர் மோட்டூர் சிவசுப்பிரமணிய சுவாமி சார்பில் மரியாதை செய்யப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்