முதுமலை புலிகள் காப்பகத்தில் சூழல் சுற்றுலா ரத்து

தொடர் கனமழை மற்றும் மின்சாரம் துண்டிப்பு காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-07-20 12:29 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளது. இது தவிர சுற்றுலா தலங்களை உள்ளடக்கியதால் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளிர்ந்த கால நிலையை உணருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஊட்டி, கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கார மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுதால் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள 700-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று முன்தினம் இருளில் மூழ்கியது.

இதனிடையே கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் முதுமலை புலிகள் காப்பக பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் வருகிற 22-ந்தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, முதுமலை வரவேற்பு வனச்சரகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

"நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முதுமலை தெப்பகாட்டில் கடந்த ஒரு வார காலமாக கனமழை காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை தொடர்ந்து நீடிக்கும் காரணத்தால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தெப்பக்காட்டில் இயங்கி வரும் சூழல் சுற்றுலா இன்று (20-ந் தேதி) முதல் வருகிற 22-ந்தேதி வரை மூடப்படுகிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்