மடத்துக்குளம் அருகே தொடர் மின்தடையால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து அவர்கள் மின்சார வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.
அடிக்கடி மின்தடை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த கருப்புசாமிபுதூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 2 புதிய மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோரிக்கை மனு
கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கணியூர் மின்வாரிய அதிகாரிகளை விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.மேலும் மின்தடையை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கணியூர் மின்சார வாரிய அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் கூறினர்.