கிழக்கு கடற்கரை சாலை சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சுங்கச்சாவடியில் நாளை (சனிக்கிழமை) முதல் கட்டணம் உயர்கிறது. வாகனங்களின் வகையைப் பொருத்து ஒருமுறை சென்றுவர ரூ.47 முதல் ரூ.301 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-31 00:14 GMT

சென்னை,

சென்னை-மாமல்லபுரம் இடையே போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது.

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையேயான சாலையை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றியது. தற்போது அந்த சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இதன் காரணமாக மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் அக்கரை-மாமல்லபுரம் வரை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கக்கட்டணம் உயர்வு

அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சுங்கக்கட்டணம் நாளை (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்றும், அந்த அடிப்படையில் ஏப்ரல் 1-ந்தேதியான நாளை முதல் இந்தக்கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் இந்தச்சாலையை பராமரித்து வரும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி அக்கரை-மாமல்லபுரம் இடையே கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.47, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.70, ஒரே நாளில் பலமுறை பயணம் செய்ய ரூ.128, மாதாந்திர கட்டணம் ரூ.2,721 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.75, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.113 கட்டணம் ஆகும்.

மாதக்கட்டணம்

பஸ், இருசக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.157, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.236 கட்டணம் ஆகும். 3 சக்கர வணிக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.172, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.258 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.247, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.370 கட்டணம். கனரக கட்டுமான வாகனங்கள், 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.301, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.451 கட்டணம் ஆகும்.

உள்ளூர் கார்கள் சுங்கச்சாவடியை கடக்க மாதக்கட்டணம் ரூ.240 ஆகும். பள்ளிப்பேருந்துகளுக்கு மாதக்கட்டணம் ரூ.1,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை (சனிக்கிழமை) முதல் இந்தப்புதிய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்