நீலகிரி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடக்கம்
நீலகிரி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியுள்ளது;
நீலகிரி,
கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா தலங்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் குடும்பத்துடன் வருகின்றனர்.
இதனால், ஊட்டி போன்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இட வசதி இல்லை. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த சென்னை ஐகோர்ட்டு நாளை முதல் (மே 7) ஜுன் 30ம் தேதி வரை சுற்றுலா தலங்களான நீலகிரி, கோடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. epass.tnega.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியுள்ளது. அதேவேளை அரசு பஸ்கள் மூலம் நீலகிரி செல்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.