மசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா
மசினி அம்மன் கோவிலில் நடந்த தசரா திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மசினி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நீண்ட பெரிய வரலாற்றை கொண்டு உள்ளது. இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் மைசூரை சேர்ந்தவர்கள், அங்கிருந்த மோசமான அரசியல் சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாதால் இங்கு வந்து குடியேறினார்.
அப்போது அவர்கள் தங்கள் குலதெய்வம் மசினி அம்மனை நேரில் சென்று வழிபட முடியாத காரணத்தால் தங்கள் வசிக்கும் பகுதியில் இங்கு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தனர்.
கர்நாடக மாநில மைசூரில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவதைபோல் மசினி அம்மன் கோவிலிலும் தசரா பண்டிகை சிறப்பாக நடக்கிறது. இந்த கோவில் கருவறையில் 4 அடி உயரம் 2 அடி அகலம் உடைய அம்மன் சிலை உள்ளது
மேலும் தொட்டம்மன், மசினி அம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரியம்மன், சிறியூர் மாரியம்மன், ஆனைக்கல் மாரியம்மன், சொக்கநல்லி மாரியம்மன், தண்டுமாரியம்மன் ஆகிய 6 சிலைகள் கருவறையை சுற்றி உள்ளன. இங்கு வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நிலையில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த வாரம் கொலு வைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாயார் சிக்கம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிலையை பழங்குடி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மசினி அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து தேர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தது. இதன்பின்னர் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் பக்தர்களின் ஆரவாரத்துடன் புறப்படும் தேர் கடைசியாக நிலையை வந்து அடைந்தது.
விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.