தசரா குழுவினர் பெறும் தற்காலிக மின் இணைப்புக்கு அதிக டெபாசிட் தொகை வசூல் செய்வதாக பா.ஜனதா கட்சி குற்றச்சாட்டு

தசரா குழுவினர் பெறும் தற்காலிக மின் இணைப்புக்கு அதிக டெபாசிட் தொகை வசூல் செய்வதாக பா.ஜனதா கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2023-10-20 18:45 GMT

தசரா குழுவினர் பெறும் தற்காலிக மின்இணைப்புக்கு அதிக அளவில் டெபாசிட் தொகை பெறப்படுவதாக பாஜனதா கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மின் இணைப்பு

உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தசரா விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து சிறு, சிறு தசரா குழுக்கள் அமைத்து நேர்ச்சை கடன் செலுத்துவது வழக்கம்.

இதற்காக பக்தர்கள் தங்கள் ஊரில் உள்ள கோயில்களில் தசரா கூடம் அமைப்பது காலம் காலமாக நடந்து வரும் பழக்கமாகும். இந்த கோவில்களில் ஏற்கனவே மின்சார இணைப்பு இருந்தாலும் தசரா கூடத்துக்கு புதிதாக தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மின்வாரியமும், மாவட்ட நிர்வாகமும் வற்புறுத்துகிறது. கடந்த ஆண்டு இவ்வாறு தற்காலிக இணைப்பு எடுக்காத தசரா குழுவினருக்கு பல்லாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பக்தர்களுக்கு மின்வாரியம் மிரட்டல் விடுத்தது. மின் வாரியத்தின் வற்புறுத்தலின் பேரில் தற்காலிக மின் இணைப்பு பெற்ற தசரா குழுவினருக்கு, அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகையில், உபயோகித்த மின் கட்டணம் போக மீதி பணத்தை இன்றுவரை திருப்பி கொடுக்கவில்லை.

கூடுதல் டெபாசிட்

இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட டெபாசிட் தொகை சுமார் 40 சதவீதம் அளவுக்கு உயர்த்தி ஒவ்வொரு தசரா குழுவினரும் ரூ.12 ஆயிரத்து 482 டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என்றும், அதில் தசரா குழுவினர் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.12 கணக்கிடப்படும் என்றும் பக்தர்களை வதைக்கும் விதமாக மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது. மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை பக்தர்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், தசரா குழு கலாச்சாரத்தை அழிக்கும் விதமாகவும் உள்ளது.

இதனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இந்த ஆண்டு கூடுதலாக வசூலித்த டெபாசிட் தொகையை தசரா குழுவினர் உபயோகித்த மின் கட்டணத்தை கழித்துவிட்டு மீதி தொகையை தசரா குழுவினரிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் பா.ஜனதா சார்பில் தசரா குழுவினரை திரட்டி தூத்துக்குடி மின்வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்