துர்க்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டையில் துர்க்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-10 18:39 GMT

துர்க்கையம்மன் கோவில்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, லாலாபேட்டை, கீழாண்டை வீதியில் உள்ள துர்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக புதிய கலசங்களும், சாமி சிலைகளும் கிராமத்தில் ஊர்வலமாக கரிவலம் சென்றது. பொதுமக்கள் சாமிக்கு ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். கடந்த புதன்கிழமை காலையில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த யாக குண்டத்தில் புனித நீர் நிரப்பபட்ட கலசங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, சாந்தி ஹோமம், திசா ஹோமம், மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பாணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேஷம், பூர்ணாஹூதி ஆகிய பூஜைகள் நடந்தது.

நேற்று முன்னதினம் காலையில் விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், விஷேச திரவிய ஹோமம், உபசாரங்கள், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் ஆகிய பூஜைகள் மகா தீபாராதனையுடன் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, அவப்ருத யாகம், விசேஷ திரவிய ஹோமம், யாத்ரா தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்தனர்.

கும்பாபிஷேகம்

விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி சக்தி மோகனானந்த சுவாமிகள், வனதுர்கா அம்மா சாமிகள், தன்வந்திரி முரளிதர சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வேதமந்திரங்கள் சொல்லி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்று கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கோவிலில் உள்ள துர்கையம்மன், துலுக்கானத்தம்மன், ஏகவள்ளியம்மன் ஆகிய சாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீர் கோவிலை சுற்றி நின்று வழிபட்ட பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

பொதுமக்கள், வியாபாரிகள் புனித நீரை பாத்திரம், பாட்டில்களில் எடுத்து சென்று வீடு, கடைகளில் தெளித்து பூஜை செய்து வழிப்பட்டனர். மாலையில் காஞ்சனகிரியான் பஜனை குழு சார்பில் பக்தி இன்னிசை கச்சேரி, பரத நாட்டிய மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு வாண வேடிக்கை, நாடகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கோவிலில் காலையில் இருந்து மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் லாலாபேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மைதாரர்கள், பொதுமக்கள், விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்