துரை தயாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சிகிச்சையில் இருக்கும் துரை தயாநிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். "மங்காத்தா'', "தமிழ்ப் படம்'' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் துரை தயாநிதிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துரை தயாநிதிக்கு உடலில் மூளை வாத பிரச்சினை இருந்ததாகவும், இதற்காக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார். சுமார் 20 நிமிடம் மருத்துவமனையில் இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரை தயாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.