நீர்வழி கால்வாய்களில் இறைச்சி, காய்கறி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

செங்கத்தில் நீர்வழி கால்வாய்களில் இறைச்சி, காய்கறி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-10-31 13:15 GMT

செங்கம்

செங்கம் - போளூர் ரோடு பகுதியில் இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் சாலை ஓரங்களில் கொட்டப்படுவதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது.

குறிப்பாக போளூர் ரோடு பட்டுபூச்சி அலுவலக பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள நீர்வழி கால்வாய்கள் மற்றும் சாலை ஓரங்களில் இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் கொட்டப்படுகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

அதேபோல போளூர் சாலையில் இருந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் செல்லும் சாலையிலும் கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் உணவகங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாழையிலை, பழைய உணவுகழிவுகள் சாலை ஓரங்களிலும், நீர்வழி கால்வாய்களிலும், அருகில் உள்ள ஏரியை ஒட்டியும் கொட்டப்படுகிறது.

இதனால் ஏரியில் உள்ள நீரின் தன்மை மாசுபடுகிறது.

எனவே சாலையின் இருபுறமும் உள்ள நீர்வழி கால்வாய்கள் மற்றும் ஏரி உள்ளிட்ட இடங்களில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்