பிச்சைக்காரன் விடுதியில் கொட்ட அடுத்த மாதம் 31-ந் தேதி வரை அனுமதி
சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிச்சைக்காரன் விடுதியில் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை குப்பை கொட்ட அனுமதித்து சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிச்சைக்காரன் விடுதியில் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை குப்பை கொட்ட அனுமதித்து சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பிச்சைக்காரன் விடுதியில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 13-ந் தேதி சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வர்த்தக அணி துணை செயலாளர் விஜயரெங்கன் ஆகியோர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளில் உடனடியாக பொது குடிநீர் இணைப்பு கூடுதலாக அமைத்து தருவது. தேவைப்படும் இடங்களில் கூடுதலாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தருவது.
போராட்டம்
அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை பிச்சைக்காரன் விடுதியில் தற்காலிகமாக குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பது. அதற்குள் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தினை தேர்வு செய்வது. கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது கிடைக்க அரசு சார்பில் பரிசீலனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராமு, கஸ்தூரிபாய் செந்தில்குமார், ரம்யா தன்ராஜ், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்னர் ஊர் பொதுமக்கள் கூட்டாக கூறுகையில், அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்யவில்லை என்றால் நவம்பர் 1-ந் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.