கயத்தாறு, கடம்பூர் பகுதியில் பெய்த கனமழையால் கண்மாய், குளங்கள் நிரம்பின

கயத்தாறு, கடம்பூர் பகுதியில் பெய்த கனமழையால் கண்மாய், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-10-27 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு, கடம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் கொட்டி தீர்த்த கனமழையால் கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனமழை

கயத்தாறு மற்றும் கடம்பூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. . இதனால் இப்பகுதியில் மானாவாரி நிலங்களில் விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலங்களில் முளைத்த பயிர்களுக்கு ஊட்டச்சத்தாக இந்த மழை இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிக்குள்...

கனமழையால் கடம்பூர் பேரூராட்சி பகுதியான தங்கம்மாள்புரம் கிராமத்தில் மழை நீர் தெருக்களிலும், வாறுகால்களிலும், ஊருக்கு அருகில் உள்ள ஓடைகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயநிலை உருவானது.

உடனடியாக கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பிச்சையா, பேரூராட்சி நிர்வாக அலுவலர் பாலமுருகன், பேரூராட்சி தலைவி ராஜேஸ்வரி, துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஓடைகளின் வாறுகால் அடைப்புகளை அப்புறப்படுத்தி தண்ணீரை வழிந்தோட நடவடிக்கை எடுத்தனர்.

கண்மாய்கள் நிரம்பின

இந்த மழைநீர் கண்மாய், குளங்களுக்கு சென்றதால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் செல்லாமல் தப்பின. இப்பகுதியிலுள்ள கண்மாய், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கயத்தாறு பகுதியில் 15 மி.மீ. மழையும் கடம்பூர் பகுதியில் 55 மி.மீ. மலையும் பதிவானது. 

Tags:    

மேலும் செய்திகள்