கோடை விடுமுறை காரணமாககொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறை காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.;
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் உள்ள பாறைகளில் இருந்து தண்ணீர் கொட்டும் போது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். அதனால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து மகிழ்வார்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.இந்தநிலையில் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாய் குளித்துவிட்டு, அங்கு விற்கப்படும் மீன் வறுவல்களை வாங்கி சுவைத்தனர். சுற்றுலா பயணிகள் நேற்று அதிக அளவில் வந்திருந்ததால் கோபி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.