மலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 36 அடியை தாண்டியது.;

Update: 2023-10-14 18:45 GMT

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்பு மற்றும் மலையோர பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,150 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் 48 அடி கொள்ளளவுள்ள அணையின் நீர்மட்டம் 36.16 அடியை எட்டியது. இதே போன்று 77 அடி கொள்ளளவுடைய பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் 64.80-க்கு வந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 584 கன அடி நீர் வந்தது. சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து 15.38 அடி மற்றும் 15.48 அடியாக உயர்ந்தது.

இந்தநிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணை பகுதிகளில் நேற்று பிற்பகல் மற்றும் மாலை நேரத்திலும் கன மழை பெய்தது. இதே போல் குலசேகரம், திற்பரப்பு, களியல் ஆகிய இடங்களிலும் மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நாகா்கோவில், ஆரல்வாய்மொழி, தோவாளை, கொட்டாரம், கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவில் சாரல் மழை பெய்தது. இந்த திடீர் மழையினால் ஏற்பட்ட குளிர்ந்த சீதோஷ்ண நிலையை பொதுமக்கள் உற்சாகத்தோடு அனுபவித்தனர்.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக களியலில் 76.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

இதே போல பூதப்பாண்டி-1.2, குழித்துறை-17.8, புத்தன் அணை-21.2, சுருளகோடு-13.6, தக்கலை-8.2, பாலமோர்-41.6, திற்பரப்பு-63.7, அடையாமடை-4.2, ஆனைகிடங்கு-3 மி.மீ. என்ற அளவில் மழை பெய்திருந்தது. அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-59.2, பெருஞ்சாணி-21.6, சிற்றார் 1-24.2, சிற்றார் 2-22.4, மாம்பழத்துறையாறு-2.8 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மேலும் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

விடுமுறை நாளான நேற்று காலை முதல் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் அருவியில் குளிக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சிற்றார் அணைகளின் நீர் மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து உயர்ந்து வருகிறது. நேற்று இரவு இந்த அணைகளின் நீர்மட்டம் 16 அடியை எட்டியது. இந்தநிலையில் வெள்ள அபாயத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சிற்றாறு 1 அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரை மறுகால் மதகுகள் வழியாக திறக்கின்றனர். இதனால் கோதையாறு மற்றும் குழித்துறை தாமிரபரணியாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்