பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் திடீர் சாலை மறியல்

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல பஸ் வசதி இல்லாததால் கிரிவல பக்தர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-12 17:43 GMT

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல பஸ் வசதி இல்லாததால் கிரிவல பக்தர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்காண பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கி இன்று காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. நேற்று திருவண்ணாமலை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரை சுற்றி 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கிரிவலம் முடித்துவிட்டு வரும் பக்தர்கள் ஏறி தங்களது ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து கழகமும் பஸ் வசதிகள் ஏற்பாடு செய்து இருந்தது.

இதில் திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் திருக்கோவிலூர் சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் நிறத்தப்பட்டு இருந்தது.

சாலை மறியல்

கிரிவலம் முடித்துவிட்டு திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்கள் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் திருக்கோவிலூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்த பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வரும் பக்தர்கள் அசதியில் பஸ் கிடைத்தால் உடனடியாக ஏறி அமர்ந்து விடலாமே என்று எண்ணத்தில் பஸ் நிலையங்களுக்கு வருகின்றனர்.

எனவே வரும் பவுர்ணமி காலங்களில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ் வசதிஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்