வரத்து குறைவால் கரூரில் 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை

வரத்து குறைவால் கரூரில் 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத் தரசிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-06-28 18:46 GMT

வரத்து குறைவு

கரூர் பஸ்நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த தினசரி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து வருகிறது. அந்தவகையில் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் வரத்தும் குறைந்துவிட்டது.

இந்நிலையில் கரூர் தினசரி மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையானது. வரத்து குறைவின் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த வாரத்தில் ரூ.40 முதல் 50-க்கும் தக்காளி விற்பனையானது. கடந்த மாதம் ரூ.25-க்கு 1 கிலோ தக்காளி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பீன்ஸ் ரூ.140

இதேபோல் கடந்த வாரத்தை விட மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. அதன்படி (1 கிலோ) கேரட் ரூ.100-க்கும், பீன்ஸ் ரூ.140-க்கும், பீட்ரூட் ரூ.70-க்கும், கோழி அவரைக்காய் ரூ.160-க்கும், முள்ளங்கி ரூ.60-க்கும், உருளைகிழங்கு ரூ.30-க்கும், புடலங்காய் ரூ.50-க்கும், வெண்டைக்காய் ரூ.50-க்கும், முட்டைக்கோஸ் ரூ.30-க்கும் விற்பனையானது.

இதேபோல் சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25 முதல் 30-க்கும் விற்பனையானது. இந்த காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை விட அதிகமாக உயர்ந்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் தக்காளி உபயோகம் என்பது வெகுவாக குறைந்து விட்டது எனவும் கூறலாம்.

இரு மடங்கு அதிகம்

இதுகுறித்து காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.25-க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.90-க்கு விற்பனையாகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த வாரத்தை விட இருமடங்கு அதிகமாகி உள்ளது. தக்காளி மற்றும் காய்கறிகளின் வரத்து அதிகமானால்தான் விலை குறையும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்