மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் தேங்கும் கழிவுநீர்- பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளார்கள்.;

Update:2022-12-05 00:15 IST

கிணத்துக்கடவு

மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளார்கள்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கோவை -பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்ட போது கிணத்துக்கடவு ஊருக்குள் 2½ கிலோமீட்டர்தூரம் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து சாலைப்புதூர் பெட்ரோல் பங்க் வரை அணுகுபாலம் அமைக்கப்பட்டது. இதன் இருபகுதியிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. இந்த சாலை ஒரு வழிப்பாதை என்பதால் எதிரே மற்ற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதில் சர்வீஸ் சாலையில் கிழக்கு பகுதியில் மழைநீர் செல்ல வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு சர்வீஸ் சாலை பகுதியான அணுகுபாலத்தின் மேற்கு பகுதியில் அண்ணாநகர், செம்மொழி கதிர்நகர், கிரீன் கார்டன், மீனாட்சி கார்டன், பகவதிபாளையம், சாலைபுதூர் ஆகிய பகுதிக்கு செல்லும் வழியில் சர்வீஸ் சாலை அருகில் அண்ணாநகர் முதல் குறிப்பிட்ட தூரத்திற்கு மழைநீர் வடிகால் இல்லை. இதனால் அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மழைநீர் மற்றும் வீடுகளில் உள்ள கழிவு நீர் சர்வீஸ் சாலை ரோட்டோரம் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனால் இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து கழிவு நீர் ரோட்டோரம் செல்வதால் இந்த சாலை வழியாக செல்லும் பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சர்வீஸ் சாலை பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மழை நீர் வடிகால் இல்லாததால் அண்ணா நகர் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்குகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் நில ஆர்ஜிதம் செய்யாமல் இருப்பதால் மழைநீர் வடிகால் கட்ட முடியவில்லை என்று கூறுகின்றனர். ஆனாலும் கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் வழிந்து செல்லும் கழிவு நீர் ரோட்டில் செல்லாதவாறு இருக்க தடுப்பு நடவடிக்கை எடுத்து தொற்று நோய் ஏற்படாதவாரு இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்