போதிய மழை இல்லாததால் சோலையாறு அணை நீர்மட்டம் 86 அடியாக சரிந்தது- மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

போதிய மழை இல்லாததால் சோலையாறு அணை நீர்மட்டம் 86 அடியாக சரிந்தது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-09-12 19:30 GMT


வால்பாறை


போதிய மழை இல்லாததால் சோலையாறு அணை நீர்மட்டம் 86 அடியாக சரிந்தது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


சோலையாறு அணை


வால்பாறையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக சோலையாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி ஆகும். இந்தநிலையில் வால்பாறை பகுதியில் தென் மேற்கு பருவமழை பொய்த்து பெயரளவில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளுக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.


இதன்காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து எதிர்பார்த்த அளவு இல்லாமல் போய் விட்டது. கடந்த ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் இதே நாளில் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை தனது முழு கொள்ளளவை தாண்டி 162 அடியில் இருந்தது. சோலையாறு அணையில் இருந்து நான்கு முறைகளுக்கு மேல் திறந்து விடப்பட்டது.


86 அடியாக சரிந்தது


ஆனால் இந்த ஆண்டு இது நாள் வரை ஒரு முறை கூட அணை தனது முழு கொள்ளளவை எட்டவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் தொடங்கி ஒரு வாரம் மட்டுமே லேசான மழை பெய்தது தொடர்ந்து மழை பெய்யவில்லை.


இதனால் சோலையாறு அணைக்கு போதிய தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்து வருவதால் சோலையாறு அணை நீர்மட்டம் 86 அடியாக சரிந்தது.


மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்


சோலையாறு அணையின் இரண்டு மின் நிலையங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் 2 மின் நிலையங்களிலும் சேர்ந்து 1,554 கன அடித் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 968 கன அடித் தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. சோலையாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை விட வரத்து மூன்று மடங்கு குறைவாக இருந்து வருவதால் தொடர்ந்து சோலையாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை நின்று போகும் காலம் நெருங்கி வருவதால் வரும் நாட்களில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதோடு, குடிநீர் தேவை கேள்விக்குறியாகி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்