ஆணையாளர் இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

ஆணையாளர் இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேல்விஷாரம் நகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.;

Update: 2023-05-31 18:11 GMT

வளர்ச்சி பணிகள் பாதிப்பு

மேல்விஷாரம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன் தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் கோபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜபர் அகமது:- இறைச்சி கடைகளில் வெளியேற்றப்டும் கோழி கழிவுகள் சாலையின் ஓரம் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை சாலையில் கொட்டும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் ஆணையாளர் இல்லாததால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. உடனடியாக ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்.

ஆபத்தான நிலையில்

ஜமுனா ராணி:- எனது வார்டு பகுதியில் உள்ள இரட்டை பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். 1-வது மற்றும் 2-வது தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய்கள் உள்ளது. அதனை தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சீரமைக்க வேண்டும். உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து ஓராண்டு ஆகிறது. பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை சீர் செய்ய வில்லை.

உதயகுமார்:- பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது.

லட்சுமி:- வார்டில் உள்ள தெருக்களுக்கு பெயர் பலகை வைக்க வேண்டும். பெயர் பலகை இல்லாததால் வெளியிலிருந்து வரும் நபர்கள் விலாசம் கண்டுபிடிக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தினசரி குடிநீர்

காதர் பாட்ஷா:- எனது வார்டில் உள்ள கிணற்றில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்குகிறது. அதனை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ஜெயந்தி:- பெரும்பாலான தெருக்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. அதனை சீர் செய்து தர வேண்டும். குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை தான் வருகிறது. தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்