பருவமழை சரிவர பெய்யாததால் கூடலூர் பகுதியில் ஆறுகள் வறண்டன; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கூடலூர் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் ஆறுகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2023-09-01 18:45 GMT

ஓவேலி பார்வுட் ஆறு வறண்டு பாறைகள் வெளியே தெரியும் காட்சி.  

கூடலூர்: கூடலூர் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் ஆறுகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பருவமழை சரிவர பெய்யவில்லை

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து வருகிறது. இதன்படி நடப்பாண்டிலும் பருவமழை பெய்யும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஜூன் மாத தொடக்கத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

இதனால் கோடை காலத்தில் கூடலூரில் வறண்டு கிடந்த ஆறுகளில் தண்ணீர் வரத்து தொடங்கியது. ஆனால் அதன்பிறகு கூடலூர் பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யவில்லை. மேலும் வழக்கத்துக்கு மாறாக கடும் வெயில் காணப்படுகிறது. ஊட்டி உள்ளிட்ட இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

ஆறுகள் வறண்டன

இதனால் தற்போது கூடலூர் பகுதியில் உள்ள பாண்டியாறு, மாயாறு, ஓவேலி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வறண்டு வருகிறது.

குறிப்பாக ஓவேலி பார்வுட் ஆற்றில் தண்ணீர் அடியோடு குறைந்து பாறைகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக வனப்பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவ வாய்ப்புள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தடுப்பணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

இதுகுறித்து கூடலூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கூறியதாவது:- 'கூடலூர் பகுதியில் இதுவரை இல்லாத வகையில் பருவமழை சரிவர பெய்யாமல் கோடைகாலம் போல் வெயில் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் ஆறுகள் வறண்டு வருகின்றன. இதன்காரணமாக விவசாயத்திற்கு தண்ணீர் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்