ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் சதுரகிரியில் 100 பக்தர்கள் தவிப்பு
சதுரகிரி நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகாிப்பால் 100 பக்தர்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.;
வத்திராயிருப்பு,
சதுரகிரி நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகாிப்பால் 100 பக்தர்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
ஆடி அமாவாசை திருவிழா
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு நேற்று வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனவே நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். மழை அறிகுறி இருந்ததால் காலை 10 மணி அளவில் வனத்துறை கேட் மூடப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.
நேற்று மாலை திடீரென பெய்த கனமழையினால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளான சங்கிலிபாறை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஒடை உள்ளிட்ட நீரோடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பக்தர்கள் தவிப்பு
மழை பெய்தவுடன் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் கோவிலில் இருந்து இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்துவிட்டு இறங்கிய பக்தர்களில் பலர், சங்கிலி பாறை ஓடை, மாங்கனி ஓடை பகுதியில் சிக்கினர். அங்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீர் ஓடைகளை கடக்க முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நீர் வரத்து பகுதிகளுக்கு வர வேண்டாம் என பக்தர்களை எச்சரிக்கை செய்து, ஆங்காங்கே பாதுகாப்பாக நின்றுகொள்ளுமாறு வலியுறுத்தினர். பக்தர்களை மீட்பதில் தாமதம் நிலவி வருகிறது. மழையும் நீடித்தால் பக்தர்கள் இரவில் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.