திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டி: நடிகர் அஜித்குமார் பங்கேற்றார்

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.;

Update: 2022-07-27 21:26 GMT

திருச்சி,

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் அஜித்குமார் பங்கேற்பு

நேற்று இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அவரை வரவேற்று போட்டியில் பங்கேற்க வைத்தனர். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய 3 பிரிவுகளிலும் அஜித்குமார் பங்கேற்று இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் திருச்சி வந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் நேற்று காலை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் திரண்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்று போட்டியிலும் பங்கேற்றுவிட்டு அஜித்குமார் வெளியே வந்தபோது, ரைபிள் கிளப் வெளியே குவிந்து இருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.

ரசிகர்கள் திரண்டனர்

அவரும் ரசிகர்களை பார்த்து இருகட்டை விரல்களை தூக்கி வெற்றி பெற்றதுபோன்ற சைகை செய்தார். இதை கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் அஜித்குமாரை செல்போன்களில் படம் பிடித்தனர். மேலும், ஒரு சில ரசிகர்கள் ஆர்வத்துடன் ரைபிள் கிளப்பில் போட்டி நடைபெறும் அரங்கிற்குள் நுழைந்தனர். அஜித்குமாருடன் செல்பி எடுத்து கொள்ள போட்டி போட்டு முண்டியடித்ததால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி

இந்தநிலையில், நடிகர் அஜித்குமாரை பார்ப்பதற்காக திருச்சி ரைபிள் கிளப் முன்பு மாலை 5 மணிக்கு மேல் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், ரசிகர்களை உற்சாகபடுத்த ரைபிள் கிளப் மாடியில் ஏறி நின்று அவர்களை பார்த்து நடிகர் அஜித்குமார் கைகளை அசைத்தும், வணக்கம் தெரிவித்தும் உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கே.கே.நகர் சாலையில் அஜித்குமார் ரசிகர்கள் திரண்டதால் அந்த பகுதியில் நீண்டநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்