விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தால்தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு

விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.

Update: 2023-10-13 18:45 GMT

விசைப்படகு மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.1,300-க்கு விற்றது.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டும் என்று விசைப்படகு உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியும் என்று விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் விசைப்படகு தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடந்த 10-ந்ேததியில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நேற்று 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் திரண்டு இருந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் தினமும் சுமார் ரூ.1½ கோடி முதல் ரூ.2 கோடி வரையிலும் மீன்கள் விற்பனை நடைபெற்று வந்தது. கடந்த 4 நாட்களாக மீனவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகுகள் வழக்கம்போல் கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றன. ஆனாலும் போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் அதிகளவில் கீரி சாளை மீன், அசலை மீன்கள் மட்டுமே பிடிபட்டன. இதில் கீரி மீன்கள் கிலோ ரூ.40-க்கும், அசலை மீன்கள் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த மீன்கள் அனைத்தும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

விலை உயர்வு

இதுகுறித்து மீன்வியாபாரி பக்ருதீன் கூறுகையில், ''தற்போது புரட்டாசி மாதம் என்பதால் மீன்களின் விலை சற்று குறைவாக இருந்து வந்தது. கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ரூ.350-க்கு விற்ற ஊளி மீன் ரூ.400-க்கும், ரூ.350-க்கு விற்ற விள மீன் ரூ.380-க்கும், ரூ.1,200-க்கு விற்ற சீலா மீன் ரூ.1,300-க்கும் விற்பனையானது. இதேபோன்று கலிங்க முரள் மீன் ரூ.300-க்கும், வாளை மீன் ரூ.160-க்கும் விற்பனையானது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்