வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.;

Update: 2023-07-28 19:14 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தென்னை சாகுபடி

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு பகுதி நெற் களஞ்சியமாக உள்ளது. இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிக அளவு உள்ளன. இங்கு நெல், தென்னை, மாமரம், கடலை ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். நெல் சாகுபடி 3 போகம் செய்யப்படும். விவசாயத்திற்கு பிளவக்கல், கோவிலாறு, கண்மாய், கிணறு ஆகியவற்றின் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வறண்ட கண்மாய்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை நம்பி தான் பிழைத்து வருகின்றனர். பிளவக்கல் அணை, கோவிலாறு அணைகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வரும்.

இந்த தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும், கண்மாய்கள் வறண்டு கிடப்பதாலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

போதிய அளவு மழை இல்லாததால் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் கிணற்று நீரை வைத்து பாசனம் செய்து வருகிறோம். ஒரு சில இடங்களில் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. ஒருசில இடங்களில் போதிய தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடி உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்