மதுபோதையில் வெறிச்செயல்: மகளையும், தாயையும் வெட்டிய கொடூரன் - திண்டுக்கல் அருகே பயங்கரம்
திண்டுக்கல் அருகே மதுபோதையில் இருந்த நபர் தனது தாய் உட்பட இருவரை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு, முத்துலட்சுமி என்ற மனைவியும், நதியா என்ற மகளும் உள்ளார். மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரன், திடீரென தூங்கிக் கொண்டிருந்த தனது மகள் நதியாவை அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது, உயிர் பிழைக்க வெளியே தப்பிச் சென்ற நதியா, சாலையில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
அப்போது கொலைவெறி அடங்காத ஈஸ்வரன், தனது தாய் செல்லத்தாயையும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த முதியவர் பெரியனாண்டி என்பவரையும் சரமாரியாக வெட்ட, இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த 2 மாடுகளையும் வெட்டியதில், அவை படுகாயமடைந்தன. இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், ஈஸ்வரனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
படுகாயமடைந்த நதியாவிற்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.