குடிபோதையில் வாகனத்தை சாலையின் நடுவில் நிறுத்திய டிரைவர்
குடிபோதையில் வாகனத்தை சாலையின் நடுவில் நிறுத்திய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் அருகே உள்ள பெங்களூரூ-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து தொழிற்சாலைக்கு தேவையான இரும்பு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென சாலையின் நடுவே குறுக்காக நிறுத்தப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நின்றது.
இதனை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக கனரக வாகனத்தின் அருகே சென்று டிரைவரிடம் வாகனத்தை சாலையில் இருந்து ஓரமாக எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர். அப்போது டிரைவர் மதுபோதையில் இருந்ததை அறிந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து வாணியம்பாடி சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் மதுபோதையில் இருந்த டிரைவர் கனரக வாகனத்தை வாணியம்பாடி சுங்கச்சாவடி நோக்கி ஓட்டி சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த அம்பலூர் போலீசார் கனரக வாகனத்தை சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி மதுபோதையில் வாகனம் இயக்கிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.