கேரளாவில் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு: தூத்துக்குடியில் 6 பேர் சிக்கினர்

கேரளாவில் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகப்பட்ட குஜராத்தை சேர்ந்த விசைப்படகுடன் 6 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தூத்துக்குடியில் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-22 18:45 GMT

கேரள மாநிலம் கொச்சி கடல் பரப்பில் கடந்த வாரம் கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து ஒரு கப்பலை மடக்கி திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த கப்பலில் இருந்த ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 525 கிலோ கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த கப்பலில் இருந்து இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருளை வினியோகம் செய்ய இருந்தது தெரியவந்தது. மேலும், நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த கப்பலில் இருந்து சிறிய படகுகள் மற்றும் கப்பல் மூலம் போதைப்பொருளை பிற இடங்களுக்கு கடத்தி சென்று இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நடுக்கடலில் அந்த கப்பலில் இருந்து ஏதேனும் படகுகளில் போதைப்பொருட்கள் வேறு இடங்களுக்கு கடத்தப்பட்டு உள்ளதா?, அந்த கப்பல் கண்டறியப்பட்ட பகுதிகளில் சந்தேகப்படும்படியாக ஏதேனும் சிறிய படகுகள் சென்று உள்ளதா? என்பது குறித்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு குஜராத்தைச் சேர்ந்த ஒரு பழைய மீன்பிடி விசைப்படகு சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்ததாக கூறப்படுகிறது. எனவே, அந்த படகுக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகித்தனர். தொடர்ந்து படகு கண்காணிப்பு தொழில்நுட்பம் (வெசல் டிராக்கிங் சிஸ்டம்) மூலம் அந்த விசைப்படகை கண்காணித்தனர்.

இதில், அந்த விசைப்படகு குஜராத்தில் இருந்து 6 பேருடன் புறப்பட்டு உள்ளது. பின்னர் அந்த படகு கொச்சியை கடந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. ெதாடர்ந்து அந்த படகு இலங்கைக்கு செல்ல முயன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடனடியாக சென்னையை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் அந்த படகை கண்காணிப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த படகை கண்காணித்தனர்.

அப்போது கொச்சியை கடந்து வந்தபோது, அந்த படகில் திடீர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த படகில் இருந்தவர்களுக்கு போலீஸ் என்பதை மறைத்து உதவி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் அவர்களை தருவைகுளத்துக்கு வருமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை உண்மை என்று நம்பிய 6 பேரும் நேற்று விசைப்படகுடன் தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு தரைதட்டியது. இதையடுத்து அந்த விசைப்படகை பறிமுதல் செய்த போலீசார், கடல் நீர்மட்டம் உயர்ந்த பிறகு அதனை கரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். மேலும் படகில் உள்ள 6 பேரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து செல்லவும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்