போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
நெய்வேலியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.;
நெய்வேலி,
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு, என்.எல்.சி. இந்தியா நிறுவன மருத்துவமனை மற்றும் கல்வித்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நெய்வேலியில் நடைபெற்றது. இப்பேரணியை, நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது, 18-வது வட்டம் நூலகத்திற்கு எதிரே அமைந்துள்ள, சுவாமி விவேகானந்தர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று பிரதான அங்காடி பகுதியில் உள்ள காந்தியடிகள் சிலை அருகே முடிவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த பதாகைகளை கைகளில் ஏந்திய படி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து போதை பொருட்கள் பயன்படுவதற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் என்.எல்.சி. இந்தியா நிறுவன மனித வளத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் சத்தியமூர்த்தி, மருத்துவமனையின் பொது கண்காணிப்பாளர் டாக்டர் தாரணி மவுலி, என்.எல்.சி. இந்தியா நிறுவன கல்வித்துறை துணை பொது மேலாளர் நாகராஜன், என்.எல்.சி. இந்தியா மருத்துவமனையின் மனநல மருத்துவத்துறை தலைவி விஜயகுமாரி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.