தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கூட்டுறவு சங்க அதிகாரி பலி

நெல்லை அருகே சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கூட்டுறவு சங்க அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-08 20:07 GMT

கூட்டுறவு அதிகாரி

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் முனியசாமி (வயது 30). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். முனியசாமி தனது குடும்பத்துடன் நேற்று நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்திருந்தார்.

ஆற்றில் மூழ்கினார்

சீவலப்பேரி ஆற்றுப்பாலம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முனியசாமி திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை அவருடைய தந்தை உள்பட அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார்.

உடல் மீட்பு

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மாவட்ட உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆற்றில் இறங்கி ரப்பர் படகு மூலம் முனியசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் முனியசாமியின் உடலை மீட்டனர். பின்னர் சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீதாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முனியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்