தர்மபுரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து-2½ வயது ஆண் குழந்தை பரிதாப சாவு

Update: 2022-10-11 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

ஆண் குழந்தை

தர்மபுரி அருகே உள்ள செட்டிக்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இளவரசி. இந்த தம்பதிக்கு 2½ வயதில் ராகேஷ் என்ற குழந்தை இருந்தான். குழந்தை ராகேஷ் நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். இளவரசி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தை ராகேசை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசி குழந்தையை தேடினார். அப்போது அங்குள்ள தொட்டியில் ராகேஷ் தண்ணீரில் மூழ்கி கிடந்தான்.

பலி

இதையடுத்து இளவரசி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராகேசை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு இளவரசி கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை ராகேஷ் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

சோகம்

பின்னர் போலீசார் ராகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்