பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.;
சென்னை,
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலம் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். 28.07.2022 மற்றும் 29.097.2022 ஆகிய 2 நாட்கள் சென்னை வருகை தர இருப்பதால் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர கமிஷ்னர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர 28.07.2022 மற்றும் 29.07.2022 ஆகிய 2 நாட்கள், டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.