ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு டிரோன் பயிற்சி

திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு டிரோன் பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2023-01-12 19:15 GMT

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு டிரோன் பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டிரோன் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வேளாண்மைத்துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவிகளை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்க உள்ளது. டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்களை தெளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் கிராமங்களில் டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன்மூலம் ஒரு நாளில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இந்த பயிற்சியில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் சேரலாம்.

மானிய கடன்

10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் உரிமம், மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61 ஆயிரத்து 100-ஐ தாட்கோவால் வழங்கப்படும். இந்த பயிற்சியை முடித்தால் டிரோன் ரிமோட் பைலட் உரிமம் கிடைக்கும். இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும்.சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம். வேளாண்மைத்துறையின் மானிய கடன், தாட்கோவின் ரூ.2 லட்சம் மானிய கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பழங்குடியினர் மாணவர்கள், திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com -ல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்