வட்டக்கோட்டை முதல் சன்செட் பாயிண்ட் வரை கடலில் சொகுசு படகுகள் இயக்குவது குறித்து ஆலோசனை; கலெக்டர் தலைமையில் நடந்தது

வட்டக்கோட்டை முதல் சன்செட் பாயிண்ட் வரை கன்னியாகுமரி கடலில் சொகுசு படகுகள் இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.;

Update: 2022-10-11 20:41 GMT

நாகர்கோவில், 

வட்டக்கோட்டை முதல் சன்செட் பாயிண்ட் வரை கன்னியாகுமரி கடலில் சொகுசு படகுகள் இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி கடலில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் வாயிலாக சொகுசு படகு இயக்குவது குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவரும், மேலாளருமான சிவசண்முகராஜா முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

படகுகள் இயக்குவது...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு 2 குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு படகுகள் வாங்கப்பட்டது. இந்த படகுகளை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் கூடிய விரைவில் இயக்கப்படவுள்ளது.

மேலும் சுமார் 1.30 மணி நேரத்திற்குட்பட்ட பூம்புகார் படகு தளத்தில் இருந்து தொடங்கி வட்டக்கோட்டை, விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சூரியன் மறையும் இடம் (சன் செட் பாயிண்ட்) ஆகிய இடங்களை சொகுசு படகில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து மீண்டும் படகு தளத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

படகு சவாரியானது விரைவில்தொடங்குவதற்கான பணிகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் இணையதளம் வழியாக எளிய வழியில் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்