டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து
குன்னூர் பஸ் விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு காரணமான டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.;
குன்னூர் பஸ் விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு காரணமான டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பஸ் விபத்து
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 60 பேர் பஸ்சில் கடந்த மாதம் 30-ந் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு திரும்பி சென்ற போது, குன்னூர் மரப்பாலம் அருகே மலைப்பாதையின் 9-வது வளைவில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஊட்டியில் இருந்து குன்னூர் வரை டிரைவர் கோபால் (வயது 32) என்பவர் பஸ்சை ஓட்டியுள்ளார். அப்போது கிளட்ச் பிளேட்டில் இருந்து வாடை அதிகமாக வந்தது. இருப்பினும், பஸ் நிறுத்தப்பட வில்லை. பின்னர் குன்னூரில் இருந்து டிரைவர் முத்துக்குட்டி (65) பஸ்சை ஓட்டிய போது விபத்து ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஓட்டுனர் உரிமம் ரத்து
இதுகுறித்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, டிரைவர்கள் முத்துக்குட்டி, கோபால், பஸ் உரிமையாளர் சுப்பிரமணி, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் டிரைவர் முத்துக்குட்டி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஊட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் முத்துக்குட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அஜாக்கிரதையாக பஸ் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவர் முத்துக்குட்டியின், ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுக்கு ரத்து செய்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டு உள்ளார்.