உடலில் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை உயிருடன் தீ வைத்து எரித்த டிரைவர் - சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்

சேர்ந்து வாழ மறுத்ததால் கள்ளக்காதலி உடலில் பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்த டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-04-20 08:16 GMT

ஆவடியை அடுத்த கொள்ளுமேடு முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதா (வயது 40). இவர், ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2001-ம் ஆண்டு சுந்தர் என்பவருடன் திருமணம் நடந்தது. 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இருவரும் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அதன்பிறகு 2010-ம் ஆண்டில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவரை சுதா 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ், 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையில் சுதா, வேலை செய்யும் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வரும் சென்னை ஓட்டேரியை சேர்ந்த சவுந்தரபாண்டி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து சவுந்தரபாண்டி திருமுல்லைவாயல் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாரத்துக்கு 2 நாள் சவுந்தரபாண்டியனும், சுதாவும் அந்த வீட்டில் தங்கி இருப்பது வழக்கமாக இருந்துள்ளது.

இதற்கிடையில் சவுந்தரபாண்டியனுக்கும், சுதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுதா, திருமுல்லைவாயலில் தங்கி இருந்த வீட்டில் வைத்திருந்த துணிமணிகளை எடுத்துக்கொண்டு ஆவடி அடுத்த கொள்ளும்மேடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இதனால் கடந்த ஒரு மாதமாக சுதா, சவுந்தரபாண்டியனுடன் இருந்த உறவை துண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரபாண்டியன் நேற்று காலை சுதாவை சந்திக்க கொள்ளுமேடு பகுதிக்கு சென்றார்.

அப்போது கடைக்கு செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்த சுதாவை வழிமறித்த சவுந்தரபாண்டியன், தன்னுடன் வந்து வாழவேண்டும் என்று சுதாவிடம் கூறினார். அதற்கு சுதா, மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரபாண்டியன், ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து சுதாவின் உடலில் ஊற்றி அவரை உயிருடன் தீ வைத்து எரித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் சுதா அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து சுதாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆவடி டேங்க்பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சவுந்தரபாண்டியனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்