உத்திரமேரூரில் கம்பியால் குத்தி டிரைவர் கொலை
உத்திரமேரூரில் முன்விரோதம் காரணமாக கம்பியால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார்.;
டிரைவர்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி நரசிம்மன் நகரில் வசித்து வந்தவர் பார்த்திபன் (வயது 35). டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. உத்திரமேரூர் பேரூராட்சி ராகவா நாட்டார் தெருவில் வசிக்கும் ராஜேஸ்வரியின் தந்தை வரதன் நேற்று முன்தினம் உடல்நலவு குறைவு காரணமாக காலமானார்.
இறுதிச்சடங்குக்கு சென்ற பார்த்திபன் மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது உத்திரமேரூர் கருணிகர் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜி (31) அங்கு வந்தார். பார்த்திபனுக்கும், ராஜிக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
கொலை
கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் வாய்ப்பு கிடைக்கும் போது தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் 1½ மணி அளவில் பேரூராட்சி அருகே ராகவா நாட்டார் தெருவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜி, பார்த்திபனின் கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த உத்திரமேரூர் போலீசார் தப்பி ஓடிய ராஜியை வலைவீசி தேடி வருகின்றனர்.