லாரியில் இருந்து ஜல்லி இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி;வில்லுக்குறி அருகே பரிதாபம்
வில்லுக்குறி அருகே லாரியில் இருந்து ஜல்லியை இறக்கிய போது உயரழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
திங்கள்சந்தை,
வில்லுக்குறி அருகே லாரியில் இருந்து ஜல்லியை இறங்கிய போது உயரழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர்
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோசம். இவருடைய மகன் சஜின் ரயில்டான் (வயது31), லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் நேற்று மாலை 3 மணியளவில் கருங்கலில் இருந்து லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு வில்லுக்குறி அருகே உள்ள காரங்காடு பகுதியில் சாலை பணி நடைபெறும் இடத்துக்கு வந்தார். அங்கு ஜல்லியை கொட்டுவதற்காக லாரியின் பின்பகுதியை மேல்நோக்கி உயர்த்தினார். அப்போது அந்த வழியாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது லாரியின் பின்பகுதி உரசியது. இதை பார்த்து கீழே நின்ற சாலை பணியாளர்கள் சத்தம் போட்டனர்.
பரிதாப சாவு
உடனே சஜின் ரயில்டான் லாரியில் இருந்து கீழே குதிக்க முயன்றார். அதற்குள் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை பணிக்காக லாரியில் இருந்து ஜல்லி இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.