பட்டர்பிளை பாலத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
கொண்டலாம்பட்டி அருகே பட்டர்பிளை பாலத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கொண்டலாம்பட்டி:-
சேலம் அரிசிபாளையம் பகுதி சின்னப்பன் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் விஜயராகவன் (வயது 29). டிரைவர். இவர் நேற்று மதியம் அரிசி பாளையத்தில் இருந்து சங்ககிரி நோக்கி ெமாபட்டில் சென்றுள்ளார். அப்போது கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள பட்டர்பிளே பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலத்தில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.