திருத்தணி அருகே மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட டிரைவர் கைது
திருத்தணி அருகே மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குடும்ப பிரச்சினை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகள் ஷாலினி (வயது 22). இவருக்கும் மத்தேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான குமரவேல் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக திருமணம் ஆன 3 மாதத்தில் கணவனைப் பிரிந்து தந்தை வீட்டில் ஷாலினி வசித்து வருகிறார்.
ஆபாசமாக சித்தரித்து...
இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி ஷாலினி, குமரவேல் ஆகிய இருவரும் பிரிந்து வாழ்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை ஷாலினி அவரது தாயாருடன் திருத்தணி பஸ் நிலையத்தில் பஸ்காக காத்திருந்த போது, ஷாலினியின் கணவர் குமரவேல் மற்றும் அவரது உறவினர் தேசப்பன் என்பவருடன் சேர்ந்து ஷாலினியை ஆபாசமாக திட்டி, சரமாரியாக அடித்துள்ளார். மேலும் மனைவி ஷாலினியை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார்.
கைது
இதுகுறித்து ஷாலினி திருத்தணி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த குமரவேல் மற்றும் தேசப்பன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தலைமறைவாக இருந்த ஷாலினின் கணவர் குமரவேலை இன்ஸ்பெக்டர் ஏழுமலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள தேசப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.