விடுமுறை தினத்தன்றும் மது விற்பனை அமோகமாக நடந்தது.

உடுமலை நகரப்பகுதியில் விடுமுறை தினத்தன்றும் மது விற்பனை அமோகமாக நடந்தது.;

Update:2023-05-01 23:05 IST

உடுமலை நகரப்பகுதியில் விடுமுறை தினத்தன்றும் மது விற்பனை அமோகமாக நடந்தது.

அமோக மது விற்பனை

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. நேற்று மே தினத்தை முன்னிட்டு கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஒரு சில கடைகள் அதை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட பார்கள் மூலமாக நேற்று மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சமுதாயத்தில் நடைபெறுகின்ற குற்றங்களை தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவதில் போலீசாரின் பங்கு முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும். ஆனால் உடுமலை பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது. எங்கு என்ன நடந்தாலும் நமக்கென்ன என்று அன்றாடம் ஆங்காங்கே நடைபெறுகின்ற சில்லறை மது விற்பனையையும் தடுப்பதில்லை. விடுமுறை நாட்களிலும் மது விற்பனையை கட்டுப்படுத்த தவறி விடுகின்றனர்.

இதன் காரணமாக கூலித் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் பெரும்பகுதி முறைகேடாக விற்பனை செய்யப்படுகின்ற மதுவிலே கரைந்து விடுகிறது. இதனால் ஏராளமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்து வருகின்றது.

கூடுதல் விலைக்கு விற்பனை

அதுமட்டுமின்றி சில்லரை வியாபாரிகள் மூலமாக எந்த நேரமும் மது தாராளமாக கிடைப்பதால் அது எளிதில் கிடைக்கும் பொருளாகவும் மாறியுள்ளது. இதனால் இலைமறைவு காயாக புதர்மறைவு செடியாக குடித்து வந்த இளம் தலைமுறையினர் பொது இடங்களில் ஆங்காங்கே அமர்ந்து மது குடிக்கும் பழக்கத்திற்கு வந்து விட்டனர். சமுதாயத்தை சீர்திருத்துவதற்கும் அதை கட்டிக் காத்து பேணுவதற்கும் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதற்கும் உறுதுணையாக இருப்பவர்கள் போலீஸ் அதிகாரிகள். அவர்கள் கடமையை அர்ப்பணிப்பு உணர்வுடன் முறையாக முழுமையாக செய்தால் எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நடைபெறாது.

விடுமுறை தினமான நேற்று உடுமலையில் கல்பனா தியேட்டர் பின்புறம், அர்பன் பேங்க், தாராபுரம் ரோடு உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் மும்முரமாக நடைபெற்ற மது விற்பனையை போலீசார் தடுக்க தவறி விட்டனர். இதை சாதகமாகக் கொண்டு மர்ம ஆசாமிகள் கூடுதல் விலைக்கு மதுவை விற்று வருமானத்தை ஈட்டிக் கொண்டனர். உடுமலைப் பகுதியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து மது விற்பனைக்கு உறுதுணையாக உள்ள போலீசார் மீதும் முறைகேடாக மது விற்பனையில் ஈடுபட்ட ஆசாமிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் வரவேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்