குடிநீர் பிரச்சினை; சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை
குடிநீர் பிரச்சினை தொடர்பாக சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் அரை மணி நேரம் தான் வருகிறது. ஆகவே நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நகர இந்திய கம்யூனிஸ்டு சார்பில் பொதுமக்களை திரட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராயகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்த் தலைமையில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆதிநாராயணன் மற்றும் அதிகாரிகள் தரப்பில், குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் வாரத்தில் ஒருநாள் டிராக்டர் மூலமாக தனியார் கிணறுகளில் இருந்து குடிநீர் கொண்டு வந்து ராயகிரி பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாளை மறுநாள் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் ராயகிரி பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுதா, துணை தாசில்தார் வெங்கடசேகர், சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சமுத்திரக்கனி, பாலசுப்பிரமணியன், ராயகிரி நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி, விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் சொரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.