8 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நெல்லையில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 8 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீண்ட காலமாக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று குடிநீர் கட்டணம் செலுத்தாத நெல்லை மண்டலம் 16-வது வார்டு காந்திநகரில் உள்ள ஒரு வீட்டுக்கும், 21-வது வார்டு கீழப்பஜாரில் ஒரு வீட்டுக்கும், 18-வது வார்டு ஹவுசிங் போர்டு காலனியில் ஒரு வீட்டுக்கும், 22-வது வார்டு மஹ்தும் ஞானியார் பள்ளிவாசல் கீழ தெருவில் ஒரு வீட்டுக்கும், 25-வது வார்டு பர்வதசிங்ராஜா தெருவில் ஒரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதேபோல் பாளையங்கோட்டை மண்டலத்தில் 3 வீடுகள் என மொத்தம் 8 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளை வருவாய் உதவி ஆணையாளர் டிட்டோ, மண்டல உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.