தூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்

தூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்

Update: 2023-05-24 20:13 GMT

தூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டும் விவசாய விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. மணல் குவாரிகள் அமைக்க அனுமதி அளித்தால் ஆழ்குழாய் கிணறு தண்ணீர் உப்பாக மாறும் அவலநிலை ஏற்படும். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 1-ந் தேதியே திறக்க வேண்டும். தூர்வாரும் பணிகளை முறைகேடுகள் இன்றி முழுமையாக செய்ய வேண்டும். ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் வண்டல், சவுடு மண் இலவசமாக எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.

புதிய நெல் ரகங்கள்

மதுப்பாட்டில்களை விளைநிலங்களில் உடைத்துவிட்டு செல்வதால் விவசாயிகள் உரம்போடுதல், களை எடுத்தல் போன்ற வேலைகள் செய்யும்போது உடைந்த பாட்டில்களால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காலி மதுப்பாட்டில்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசே திரும்ப பெற வேண்டும். புதிய நெல் ரகங்களான கோ-56, கோ-57, ஏ.டி.டீ.-58, ஏ.எஸ்.டி.-21 ஆகிய நெல் விதைகளை அனைத்து வேளாண் விரிவாக்க மையத்திலும் இருப்பு வைக்க வேண்டும்.

கட்டளை மேட்டு வாய்க்காலில் மெயின் கால்வாயை தூர்வாராமல் கிளை வாய்க்காலை தூர்வாருகின்றனர். பூதலூர் ஆனந்த காவிரியில் தூர்வாரும் பணியை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கோனேரிராஜபுரத்தில் குடமுருட்டி ஆற்றில் இருந்து பிரியும் வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்