சமூகநீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் மனதில் இருந்து சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டாலே மாற்றம் சாத்தியமாகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update: 2023-12-27 05:50 GMT

சென்னை,

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சமூகநீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் ஆகிய மானிட நெறிகளை தமிழ்நாட்டில் நிலைநாட்ட உழைத்து வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறோம். மக்கள் மனதில் இருந்து சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டாலே மாற்றம் சாத்தியமாகும்; இது எளிதல்ல இதற்கான விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறோம்.

டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம். அம்பேத்கர் விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தாட்கோ மூலம் 10,000 பேருக்கு ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

முதலீட்டு மானியம் வழங்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பில் 12 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்