திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சங்கொலிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-02-03 18:45 GMT

கடலூர்:

கடலூர் அருகே சங்கொலிக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கடந்த 1-ந் தேதி யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக சாலை பூஜை, திரவியாகுதி, 3-ம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடந்ததும், யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது. இதில் இறால் கம்பெனி அதிபர்கள் குமாரசெல்வம், முருகவேல், எஸ்.ராஜேந்திரன் மற்றும் மாரிமுத்து, கடலூர் துறைமுகம் சேடப்பாளையம் தலைவர் பாவாடை, மில்ட்ரி விஜய்குமார், பா.ம.க. தாமரை செல்வன், தா்மகா்த்தா விவேகானந்தன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சங்கொலிக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்